ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு தனது ஆய்வறிக்கையில் தேசிய கட்சிகளின் வருமான குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. தேர்தல் சமயங்களில் தேசிய அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் சொத்து விவரங்களை சேகரித்து, அதன் தகவல்களை அறிக்கைகளாக வெளியிட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தற்போது இந்தியாவில் உள்ள ஏழு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 2015 -16 முதல் 2016 -17 வரையிலான வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்த தகவலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.1,559.17 கோடி மற்றும் செலவு ரூ.1,228.26 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பாஜகவின் வருமானம் 81% அதிகரித்துள்ளது. கடந்த இரண்டாண்டில் ரூ.570.86 கோடியில் இருந்து, ரூ.1,034.27 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அதேசமயம், காங்கிரஸின் வருமானமானது ரூ.261.56 கோடியில் இருந்து, ரூ.225.36 கோடியாக 14% குறைந்துள்ளது.
மேலும், கட்சிக்கு கிடைக்கும் வருவாய் தொடர்பான தகவல்களை ஆண்டுதோறும் அக்டேபர் 30ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். ஆனால் பாஜக இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியும் காங்கிரஸ் மார்ச் 19ம் தேதியும் மாதம் வெளியிட்டுள்ளன.
ஜனநாயகத்தையும், தேர்தலையும் வலுப்படுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது நிதி விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
