Skip to main content
Source
Tamil.oneindia.com
Date

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் ஆளும் கட்சியே வென்று ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்ற நிதி தொடர்பான தகவல்களை அசோசியேஷன் ஆஃப் டெமொக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அமைப்பு தெரிவித்துள்ளது.

ரூ 1100 கோடி நிதி

இந்தாண்டு ஐந்து மாநிலங்கள் தேர்தல் நடந்த நிலையில், பாஜக & காங்கிரஸ் உட்பட 19 அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.1,100 கோடிக்கு மேல் நிதி பெற்றுள்ளன. அதேபோல சுமார் ரூ. 500 கோடிக்கு மேலான நிதியை செலவிட்டன. பெரும்பகுதி நிதி விளம்பரங்கள் மற்றும் நட்சத்திர பிரமுகர்களின் பிரசார பயணங்களுக்கே செலவாகியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பாஜக தான் டாப்

இந்த 5 மாநில தேர்தலின் போது அதிகபட்சமாக பாஜக ரூ.611.692 கோடி நிதி பெற்றுள்ளது. அதில் ரூ.252 கோடியைச் செலவிட்டுள்ளது. அதில் கட்சி விளம்பரத்திற்காக ரூ.85.26 கோடியும், பிரசார சமயத்தில் நட்சத்திர தலைவர்களின் பயணச் செலவுக்காக ரூ.61.73 கோடியும் செலவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிலை என்ன

அடுத்தகட்டமாகக் காங்கிரஸ் கட்சி 193.77 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. அதில் விளம்பரத்திற்காக 31.451 கோடி, பயணச் செலவுக்காக 20.40 ரூபாய் உட்பட மொத்தம் 85.625 கோடி ரூபாயைச் செலவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

திமுக - அதிமுக

அடுத்து சுமார் 134 கோடி ரூபாயைப் பெற்ற திமுக 3ஆவது இடத்தில் உள்ளது. அதில் கட்சி விளம்பரத்திற்காக 52.144 கோடி ரூபாய், தலைவர்களின் பயணச் செலவுகளுக்காக 2.4 கோடி ரூபாய் என மொத்தம் 114.14 கோடி ரூபாயை திமுக செலவிட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சி ரூ.14.46 கோடி நிதி பெற்றுள்ளது. அதில் மொத்த ரூ.57.33 கோடியை அதிமுக செலவிட்டுள்ளது. குறிப்பாக ரூ.56.756 கோடியை விளம்பரத்திற்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிபிஐ கட்சி ரூ.8.05 கோடியை நிதியாகப் பெற்ற நிலையில், விளம்பரத்திற்காக ரூ.3.506 கோடி உட்பட மொத்தம் ரூ.5.68 கோடியை சிபிஐ கட்சி செலவிட்டுள்ளது.

மற்ற கட்சிகள்

தேர்தல் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.79.244 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.56.328 கோடியும் நிதியாகப் பெற்றுள்ளது. அதில் விளம்பரத்துக்கு ரூ.21.509 கோடி, பயணச் செலவுக்காக ரூ.1.173 கோடி உட்பட ரூ.32.74 கோடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செலவிட்டுள்ளது. அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் விளம்பரத்துக்கு ரூ.27.009 கோடி, பயணச் செலவுக்கு ரூ.33.02 கோடி என மொத்தம் ரூ.154.282 கோடியை செலவிட்டுள்ளது.

மொத்த செலவு

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களின் போது 19 அரசியல் கட்சிகள் ரூ. 1,116.81 கோடியை நிதியாகப் பெற்றுள்ளன. அதில் ரூ. 514.30 கோடி நிதியைச் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக விளம்பரத்திற்காக ரூ.282.08 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவாக ரூ.235.66 கோடியும், பயணச் செலவுக்காக ரூ.119.57 கோடியும், மற்ற இதர செலவுகளுக்கு ரூ.64.336 கோடியும், வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை வெளியிட ரூ.19.162 கோடியும் அரசியல் கட்சிகள் செலவிட்டுள்ளன.

விளம்பர செலவு

குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் விளம்பரத்திற்காக மட்டும் 39.13 சதவீத நிதியை செலவிட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் ஊடக விளம்பரங்களுக்கு ரூ. 201.05 கோடியும், அதைத் தொடர்ந்து விளம்பரப் பொருட்களுக்கு ரூ. 63.722 கோடியும், பொதுக் கூட்டங்களுக்கு ரூ. 17.308 கோடியும் செலவிட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளன