Skip to main content
Source
Tamil Samayam
Date

நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள், கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் வசூலித்த நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து உள்ளன. இதன் அடிப்படையில் ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 53 அரசியல் கட்சிகளில், இரண்டு கட்சிகள் மட்டுமே சரியான நேரத்தில் தங்கள் நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து உள்ளன. இதர 28 கட்சிகள், ஆறு நாட்களில் இருந்து 320 நாட்கள் தாமதமாக அறிக்கை அளித்துள்ளன. 23 கட்சிகள் இதுவரை அறிக்கை அளிக்கவில்லை.

அதிக நன்கொடை வசூல் செய்த கட்சிகளில் சிவசேனா, அ.தி.மு.க., ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன. சிவசேனா 63 கோடி ரூபாயும், அ.தி.மு.க., 52 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி, 37.37 கோடி ரூபாய் நன்கொடையாக வசூல் செய்துள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, கடந்த நிதி ஆண்டில், ரொக்கமாக, 4.63 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸின், பாட்டாளி மக்கள் கட்சி, ரொக்கமாக, 52.20 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. தி.மு.க.வுக்கு ரொக்கமாக 29 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்துள்ளது.

மேலும் 16 மாநில கட்சிகள் 1,026 நபர்களிடம் இருந்து, 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை விபரம் இன்றி, 25 கோடி ரூபாய் நன்கொடை வசூல் செய்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.