Skip to main content
Source
Tamil.oneindia
https://tamil.oneindia.com/news/india/odisha-assembly-election-2024-126-crorepati-candidates-in-third-phase-polls-607089.html
Author
Vignesh Selvaraj
Date

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைக்கு நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேசமயம், சிபிஐ (எம்.எல்) வேட்பாளரின் சொத்து மதிப்பு வெறும் 2000 ரூபாய் தானாம்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் ஆளும் பிஜேடி முதல்வர் பட்நாயக்கின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அங்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் மே 13ஆம் தேதி முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. நாளை (மே 20) இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மே 25, ஜூன் 1 ஆகிய நாட்களிலும் அங்கு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், கியோஞ்சார், பூரி மற்றும் சம்பல்பூர் மக்களவைத் தொகுதிகளுடன், இந்தத் தொகுதிகளின் கீழ் உள்ள 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஒடிசாவில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 42 சட்டப்பேரவை இடங்களுக்கு போட்டியிடும் 383 வேட்பாளர்களின் சொத்து விவர பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது.

அதன்படி, ஒடிசாவில் மூன்றாவது கட்ட சட்டமன்றத் தேர்தலில் 126 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது. ஒடிசாவில் நடைபெறும் மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பிஜு ஜனதா தள வேட்பாளர் சனாதன் மஹாகுட் ரூ.227.67 கோடி சொத்து மதிப்புடன் மிகவும் பணக்கார வேட்பாளராக உள்ளார். இவர் சம்புவா தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.

காசிபுரா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், சௌமியா ரஞ்சன் பட்நாயக்கின் குடும்பச் சொத்து மதிப்பு ரூ.122.86 கோடி என்று தெரிய வந்துள்ளது. அவர் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரூ.120.56 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்தை நாயகர்க் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பிடித்துள்ளார்.

முக்கிய கட்சிகளில், பிஜு ஜனதா தளத்தின் 42 வேட்பாளர்களில் 36 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 29 பேர், பாஜகவைச் சேர்ந்த 28 பேர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 126 வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.47 கோடி ஆக உள்ளது.

பரம்பா தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கைலாஷ் சந்திர நாயக்கிற்கு ரூ. 1000 மட்டுமே சொந்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பிரம்மகிரியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகந்தா கடாய் தனக்கு சொந்தமாக ரூ. 2,000 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) ரெட் ஸ்டார் கட்சி வேட்பாளர் கோபிநாத் நாயக் ரூ. 2000 மட்டுமே தனது சொத்து என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 126 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ள நிலையில் இவர்கள் ஆயிரங்களில் மட்டுமே தங்களுக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.