Skip to main content
Source
Tamil Indian Express
https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-dmk-donation-jdu-aap-adr-report-487728/
Author
Web Desk
Date

மாநிலக் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 91.38 சதவீதம் அல்லது ரூ.113.79 கோடி தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கஜானாவை நிரப்பியதாக ஏ.டி.ஆர் அறிக்கை வெளியீடு

Stalin’s DMK receives Rs.33 crore donation: 2020-21 ஆம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) உள்ளது.

தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளின் வருமானத்தில், 2019-20 நிதியாண்டு மற்றும் 2020-21 நிதியாண்டுக்கு இடையேயான நன்கொடைகள் மூலம் வருமானம் அதிகரித்துள்ளதாக தேர்தல் உரிமைகள் குழுவான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது. இருப்பினும், 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, ​​மற்ற இரண்டு மாநிலக் கட்சிகளான, ஆம் ஆத்மி கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை நன்கொடைகளில் சரிவு உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

நன்கொடைகளைப் பொறுத்த வரையில், 330 நன்கொடைகளில் இருந்து ரூ. 60.15 கோடியுடன் ஐக்கிய ஜனதா தளம் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் உள்ள மு.க.ஸ்டாலினின் தி.மு.க 177 நன்கொடைகளில் இருந்து ரூ.33.99 கோடி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ரூ.11.32 கோடி பெற்றதாக அறிவித்தது. இது மாநிலக் கட்சிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 4.16 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. 102 நாட்கள் தாமதத்துடன் நன்கொடை அறிக்கையை சமர்ப்பித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ரூ.4.15 கோடி நன்கொடைகள் மூலம் பெற்றுள்ளதாக அறிவித்தது.

ரூ. 20,000க்கு மேல் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவை உட்பட 27 மாநிலக் கட்சிகள் அறிவித்த நன்கொடைகளின் மொத்தத் தொகை ரூ.124.53 கோடி என ஏடிஆர் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை 3,051 நன்கொடைகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளில் 91.38 சதவீதம் அல்லது ரூ.113.79 கோடி தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஆம் ஆத்மி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கஜானாவை நிரப்பியதாக ஏ.டி.ஆர் அறிக்கை கூறியுள்ளது.

அதேநேரம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்கு இடையே பெறப்பட்ட நன்கொடைகளின் சதவீதத்தில் மிக அதிகமான குறைவைக் கண்டுள்ளன என்று ஏ.டி.ஆர் அறிக்கை கூறியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் 54 மாநிலக் கட்சிகளில் ஆறு கட்சிகள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் நன்கொடை அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக ஏ.டி.ஆர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.