Source: 
Hindutamil
https://www.hindutamil.in/news/india/965202-over-95-of-karnataka-mlas-are-crorepatis-35-have-criminal-charges-adr-report.html
Author: 
செய்திப்பிரிவு
Date: 
24.03.2023
City: 
Bengaluru

கர்நாடகா எம்எல்ஏ.க்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என அசோஷியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஆர் என்ற இந்த அமைப்பு தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் நிலவரம், வெற்றி வாய்ப்பு, எம்எல்ஏக்கள் கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, கிரிமினல் வழக்கு பின்னணி ஆகியன பற்றிய தகவல்களைப் பகிரும். அந்த வகையில் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் எம்எல்ஏக்கள் பற்றி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கர்நாடகாவில் தற்போதுள்ள 224 எம்எல்ஏக்களில் 219 பேரின் கிரிமினல் வழக்குகள் பின்னணி, நிதி நிலவரம், கல்வித் தகுதி மற்றும் பிற பின்னணி குறித்த தகவல்களை ஏடிஆர் வெளியிட்டுள்ளது. அதன் அம்சங்கள்:

கர்நாடகாவில் 2018 தேர்தலுக்குப் பின்னர் 15 எம்எல்ஏக்கள் கட்சி மாறியுள்ளனர். இவர்களில் 10 பேர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள். இப்போது அவர்கள் பாஜகவில் உள்ளனர்.

26 சதவீதம் எம்எல்ஏக்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.

* பாஜக எம்எல்ஏக்களில் 118 பேரில் 112 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். சராசரியாக ஒரு எம்எல்ஏவின் சொத்து ரூ.29.85 கோடி என்றளவில் உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.48.58 கோடி என்றளவில் உள்ளது.

* பாஜகவின் 112 எம்எல்ஏக்களில் 49 பேர், காங்கிரஸின் 67 எம்எல்ஏக்களில் 16 பேர், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் 30 எம்எல்ஏக்களில் 9 பேர் மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 35 பாஜக எம்எல்ஏக்கள், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 8 மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் மீது மிக மோசமான கிரிமினல் குற்றங்கள் உள்ளன.

* கனகாபூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் டிகே ஷிவ்குமார், அதிகபட்சமாக ரூ.840 கோடி சொத்து வைத்துள்ளார். அடுத்ததாக பிஎஸ் சுரேஷ், எம் கிருஷ்ணப்பா ஆகியோர் முறையே ரூ.416 கோடி மற்றும் ரூ.236 கோடி சொத்து வைத்துள்ளனர்.

* மொத்தமுள்ள 219 எம்எல்ஏக்களில் 73 பேர் அதாவது 33 சதவீதம் பேர் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்டுள்ளனர். 140 எம்எல்ஏக்கள் பட்டதாரிகள்.2 பேர் மட்டும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

© Association for Democratic Reforms
Privacy And Terms Of Use
Donation Payment Method