பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜகவினர்தான் அதிக குற்றச்செயல் செய்து இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தேர்தல் ஆணைய விவரங்களை வைத்து, இதை கண்டுபிடித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. தேசிய தலைவர்கள், கட்சியின் முக்கியமான தலைவர்கள், மாநில முதல்வர்கள் இதனால் கர்நாடகாவில் கூடியுள்ளனர். ஆய்வு மொத்தமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட 2560 வேட்பாளர்களின் பட்டியலில் 391 பேர் மீது பல்வேறு கிரிமினல் குற்றங்கள் இருக்கிறது, 254 பேர் மீது மிக மோசமான கிரிமினல் குற்றங்கள் உள்ளது. 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது. 4 பேர் மீது கொலை வழக்கு இருக்கிறது. 95 பேர் சரியான தகவல்களை அளிக்கவில்லை. 23 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்த வழக்கு உள்ளது. தவறாக மலர்ந்த தாமரை இதில் பாஜகதான் முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் பாஜக 224 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் ஜெயநகர் வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டார். மீதம் இருக்கும் 223 பேரில் 83 பேர் மீது மோசமான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 37 சதவிகிதம் பேர் அந்த பாஜக வேட்பாளர் பட்டியலில் குற்றம் செய்துள்ளனர். இதில் கொலை முயற்சி, கொலை வழக்கு உள்ள நபர்களும் இருக்கிறார்கள். காங்கிரஸ் பாஜகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸின் 220 வேட்பாளர்களில் 59 பேர் கிரிமினல் குற்றங்கள் செய்துள்ளனர். அதாவது காங்கிரசில் 27 சதவிகிதம் பேர் குற்றம் செய்துள்ளனர். அடுத்தபடியாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 41 பேர் குற்றம் செய்துள்ளனர். பாஜகவின் 83 பேரில் 53 பேர் மிகப்பெரிய குற்றங்களை செய்துள்ளனர். சொத்து பணக்கார வேட்பாளர்கள் பட்டியலிலும் பாஜகவே முதல் இடம் பிடித்துள்ளது. மொத்தமாக 883 பேர் கோடீஸ்வரர்கள். இதில் பாஜகவில் 97 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். அதேபோல் காங்கிரஸ் கட்சியில் 75 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். சராசரியாக கர்நாடகா தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 7.54 கோடி என்பது குறிப்பிடதக்கது.