பொதுத் தேர்தல் நடைபெற்ற கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.2,256 கோடி மதிப்பிலான தேர்தல் பாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டம் (Electoral bond scheme) அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தற்போது வரை ரூ.6,128 கோடி மதிப்பிலான தேர்தல் பாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு Association for democratic reforms (ADR). தேர்தல் ஆவணங்கள், அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் ஆவணங்கள், வேட்பாளர்களின் பிராமணப் பத்திரங்களை ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது தேர்தல் பாண்டு பற்றி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
Also Read
Modi Vs Rahul | Head to Head Analysis | Election 2019 | BJP | Congress
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நன்கொடை பத்திரத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. `ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா' மட்டுமே தேர்தல் பாண்டு விற்க அங்கீகரிக்கப்பட்ட வங்கி.
ஏடிஆர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில். 2018-ம் ஆண்டு மார்ச் தொடங்கி 2019-ம் ஆண்டு அக்டோபர் வரை ரூ.6,128 கோடி மதிப்பிலான தேர்தல் பாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், பொதுத் தேர்தல் நடைபெற்ற கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ. 2,256 கோடி மதிப்பிலான தேர்தல் பாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மும்பை நகரில் அதிகபட்சமாக ரூ.1,880 கோடி மதிப்பிலான தேர்தல் பாண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாகக்கூறி மத்திய அரசு தேர்தல் நன்கொடை பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையே கிடையாது என இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், இதன் விற்பனை தொடர்ந்து நடைபெற்று அரசியல் கட்சிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.