Skip to main content
Source
Dailythanthi
Date
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 542 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்.எல்.ஏ.க்களின் குற்ற பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு நடத்தின. தேர்தலின்போது அவர்கள் அளித்த வேட்புமனுவில் இணைக்கப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடந்தது.இதில் 15 சதவீதத்தினர் அதாவது 363 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் 67 பேர் எம்.பி.க்கள் ஆவர். 296 பேர் எம்.எல்.ஏ.க்கள் ஆவர். அதேநேரம் மத்திய மற்றும் மாநில மந்திரிகள் 39 பேரும் இந்த பட்டியலில் அடங்குவர்.
தேர்தலில் போட்டியிட தடை
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் உட்பிரிவுகள் 1, 2 மற்றும் பிரிவு 8-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதி ஒருவர், தண்டிக்கப்படும் நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அவர் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலேயே தொடர்வார். அந்த காலத்தில் அவரால் தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது.அந்தவகையில் மேற்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் தண்டனை பெற்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிடவும் தடை பெற முடியும்.
பா.ஜனதாவில் அதிகம்
குற்ற வழக்குகள் கொண்ட மேற்படி எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் அதிகம் பேர் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர். அங்கு மொத்தம் 83 பேர் வழக்குகள் வைத்திருக்கிறார்கள். அடுத்ததாக காங்கிரசார் 47 பேரும், திரிணாமுல் காங்கிரசார் 25 பேரும் வழக்குகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய எம்.பி.க்களில் 24 பேர் மீது மொத்தம் 43 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 111 எம்.எல்.ஏ.க்கள் மீது 315 வழக்குகள் விசாரணையில் உள்ளன. இவை 10 அல்லது அதற்கு மேலான ஆண்டு காலமாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பீகார் எம்.எல்.ஏ.க்கள் 54 பேர் மீதும், கேரளாவில் 42 பேர் மீதும் கொடூரமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.