Skip to main content
Source
Dinamalar
https://m.dinamalar.com/detail.php?id=3519730
Date

புதுடில்லி,: தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு 2022 - 23ல் வழங்கப்பட்ட நன்கொடைகளில், 71 சதவீத தொகையான 259 கோடி ரூபாய், பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது.

தேர்தல் பங்கு பத்திர விற்பனை வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்கப்படுவது போலவே, அறக்கட்டளைகள் வாயிலாகவும் நன்கொடைகள் அளிக்கப்படுகின்றன.கடந்த 2013 முதல் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

இந்த நன்கொடைகளை வசூலித்து அரசியல் கட்சிகளுக்கு வழங்குவதற்கு என்றே, பல்வேறு நிறுவனங்களும் அறக்கட்டைகளை துவங்கி, அதன் வாயிலாக நன்கொடைகளை பெற்று வினியோகித்து வருகின்றன. அந்த வகையில், 2022 - 23ம் ஆண்டு அறக்கட்டளைகள் வாயிலாக வசூலான நன்கொடை விபரங்களை ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

கடந்த 2022 - 23ல், மொத்தம் 39 பெரு நிறுவனங்கள், 363 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்கி உள்ளன. இதில், 34 பெரு நிறுவனங்கள் 360 கோடி ரூபாய் நன்கொடை தொகையினை 'ப்ரூடண்ட்' தேர்தல் அறக்கட்டளைக்கு அளித்துள்ளன.

இதில், 259 கோடி ரூபாய் நன்கொடை, பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இது மொத்த நன்கொடை வசூலில் 71 சதவீதமாக உள்ளது. பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு 90 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இது மொத்த வசூலில் 25 சதவீதம்.

ஒய்.எஸ்.ஆர்., காங்., - ஆம் ஆத்மி, காங்., உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து, 17.40 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளன.ப்ரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை மட்டுமே, பா.ஜ.,வுக்கு 256 கோடி ரூபாய் அளித்துள்ளது. கடந்த 2021 - 22ல் பா.ஜ.,வுக்கு 336 கோடி ரூபாய் கிடைத்தது.

பா.ஜ., - பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்.எஸ்.ஆர்., காங்., - காங்., உள்ளிட்ட கட்சிகளுக்கு ப்ரூடண்ட் தேர்தல் அறக்கட்டளை நன்கொடை அளித்து உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.