Skip to main content
Source
Dina Malar
https://www.dinamalar.com/news_detail.asp?id=3322978&device=telegram
Date

கடந்த 2021 - 22ம் நிதிஆண்டில் பிராந்திய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து, 887 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை, தேர்தல் பத்திரங்கள், டிபாசிட் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் குறித்த பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் அறிக்கையிலிருந்து விபரத்தை சேகரித்து, இந்த தகவல் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், 2021 - 22ம் நிதியாண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து, 27 பிராந்திய கட்சிகளுக்கு கிடைத்த வருவாய் குறித்த பட்டியலை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட நிதிஆண்டில், பிராந்திய கட்சிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து, 887.55 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, அந்த அரசியல் கட்சிகளின் மொத்த வருவாயில், 76 சதவீதம்.

இந்த தொகையில், 827 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வாயிலாகவும், கூப்பன்கள் வாயிலாக 38 கோடி ரூபாயும் கிடைத்துள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டில், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து, பிராந்திய கட்சிகளுக்கு, 537 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருந்தது.

அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக நன்கொடை கிடைத்தால், அவற்றை கொடுத்தவரின் விபரத்தை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு கிடைக்கும் தொகையே, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.