ஐந்து மாநிலங்களில் கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடையாக வசூல் செய்த தொகை மொத்தம் ரூ. 1,500 கோடி. ஆனால் அந்தக் கட்சிகள் செலவிட்ட தொகை வெறும் ரூ.494 கோடி மட்டுமே.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது ஐந்து தேசியக் கட்சிகளும் 16 பிராந்தியக் கட்சிகளும் வசூலித்த தேர்தல் நன்கொடையின் மொத்த தொகைதான் ரூ.1,500 கோடி.
ஐந்து மாநிலங்களில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய கட்சிகள் வசூலித்த தொகை ரூ.1,314 கோடி. ஆனால், அவை தேர்தலுக்காக செலவிட்ட தொகை ரூ.328.66 கோடி.ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தேசியக் கட்சிகளில் பாஜக வசூலித்த தேர்தல் நன்கொடை மட்டும் ரூ.1,214.46 கோடியாகும். இந்தத் தொகை மத்தியிலும் மாநில அளவிலும் அக்கட்சியால் வசூலிக்கப்பட்ட தொகையாகும். இது மொத்த தொகையில் 92.4 சதவீதமாகும்.
பாஜக-வின் மத்தியத் தலைமை ரூ.1,194 கோடியும் அக்கட்சியின் கோவா பிரிவினர் ரூ.17 கோடியும் வசூலித்துள்ளனர்.
அதே நேரத்தில் 16 பிராந்தியக் கட்சிகளின் தேர்தல் வசூல் ரூ.189 கோடியாகும். தேர்தலுக்காக இவை செலவிட்ட தொகை ரூ.166 கோடி.
ஆறு பிராந்தியக் கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவின அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.
அரசியல் கட்சிகள் ரொக்கம், காசோலை மற்றும் வரைவோலை மூலம் தேர்தல் நன்கொடைகளைப் பெற்று போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் விளம்பரம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றன. தேர்தல் விளம்பரத்துக்காக தேசியக் கட்சிகள் ரூ.189.46 கோடியும், பிராந்தியக் கட்சிகள் ரூ.111 கோடியும் செலவிட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தேசியக் கட்சிகளில் காங்கிரஸ் ரூ.62 கோடியும் தேசியவாத காங்கிரஸ் ரூ.61 லட்சமும், மார்க்சிஸ்ட் கட்சி ரூ.46 லட்சமும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
பிராந்தியக் கட்சிகளில் சிவேசனை அதிகபட்சமாக ரூ.116 கோடி வசூலித்துள்ளது. அக்கட்சி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. கோவா மற்றும் பஞ்சாபில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ரூ.37.35 கோடி அரசியல் நன்கொடையாக வசூலித்துள்ளது.
Date