Skip to main content
Source
Tamil News18
Date

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நிதியாக பாஜககாங்கிரஸ்திமுகஅதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 1100 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றிருப்பதாகவும், இதில் பெரும்பங்கு விளம்பரத்திற்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் மத்தியில் தமிழகம், புதுவை, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களுக்காக 19 அரசியல் கட்சிகள் 1100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி பெற்றிருப்பதாக அரசியல் கட்சியினரினரின் செயல்பாடு குறித்து கண்காணித்து தரவுகளை வெளியிடும் அசோசியேஷன் ஆஃப் டெமொக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி அதிகபட்சமாக பாஜக 611.69 கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றிருப்பதாகவும், இதில் ரூ.252 கோடியை தேர்தல் செலவுகளுக்காகவும், 85.26 கோடியை விளம்பரத்துக்காகவும், 61.73 கோடியை நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் பிற தலைவர்களின் பயண செலவுகளுக்காகவும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 193.77 கோடி ரூபாயை நிதியாக பெற்று அதிக நிதி பெற்ற கட்சிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அக்கட்சி ரூ. 85.62 கோடியை தேர்தல் செலவுகளுக்காகவும், 31.45 கோடியை விளம்பரத்துக்காகவும், 20.40 கோடியை நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் பிற தலைவர்களின் பயண செலவுகளுக்காகவும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இந்தியாவிலேயே அதிக நிதி பெற்ற 3வது கட்சியாக உள்ளது, அக்கட்சி ரூ.134 கோடி தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. இதில் ரூ. 114.14 கோடியை தேர்தல் செலவுகளுக்காகவும், 52.14 கோடியை விளம்பரத்துக்காகவும், 2.41 கோடியை நட்சத்திர பிரச்சாரகர்கள் மற்றும் பிற தலைவர்களின் பயண செலவுகளுக்காகவும் செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 79.24 கோடி ரூபாயும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ. 56.32 கோடியும், அதிமுக ரூ.14.46 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8.05 கோடி ரூபாயும் தேர்தல் நிதி பெற்றுள்ளன.

அதிமுக 14.46 கோடி ரூபாய் பெற்ற நிலையில், அக்கட்சி தேர்தலுக்காக 57.33 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக மட்டும் 56.75 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.