நாடு முழுதும் தற்போதுள்ள, 107 எம்.பி.,க்கள், 74 எம்.எல்.ஏ.,க்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகிய அமைப்புகள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வெறுப்பு பேச்சு வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்தன. இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த ஐந்து ஆண்டுகளில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட, 480 வேட்பாளர்கள், தங்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக உள்ள, 107 பேர் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளன. எம்.பி.,க்களில், 33 பேர் மீது வழக்குகள் உள்ளன. இதில் உத்தர பிரதேசத்தில் ஏழு, தமிழகத்தில் நான்கு பேர் மீது வழக்குகள் உள்ளன. இதில் மிகவும் அதிகபட்சமாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, 22 எம்.பி.,க்கள் மீது வழக்குகள் உள்ளன. காங்.,கைச் சேர்ந்த இருவர் மீது வழக்குகள் உள்ளன. தி.மு.க., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க.,வைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி., மீது வழக்குகள் உள்ளன.
நாடு முழுதும், 74 எம்.எல்.ஏ.,க்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளன. பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில், தலா, ஒன்பது பேர் மீது வழக்கு உள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா, தெலுங்கானாவில் தலா, ஆறு பேர் மீது வழக்கு உள்ளது. தமிழகம் மற்றும் அசாமில், தலா ஐந்து பேர் மீதும் வழக்கு உள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, 20 எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு உள்ளது. காங்கிரசில் 13; ஆம் ஆத்மியில் 6; தி.மு.க., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா, 4 எம்.எல்.ஏ.,க்களும் வெறுப்பு பேச்சு வழக்கில் சிக்கிஉள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.