ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு ஆகிய அமைப்புக்கள் இணைந்து தற்போது பதவியில் உள்ள அனைத்து எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கடந்த தேர்தலில் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன. இந்த ஆய்வில் , எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலர் தங்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் வகையில் பேசியது தொடர்பாக வழக்குகள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. 33 எம்பிக்கள் தங்கள் மீது வெறுப்பு பேச்சுக்கு எதிராக வழக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
உபியைச் சேர்ந்த 7 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், பீகார், கர்நாடகா மற்றும் தெலங்கானாவை சேர்ந்த தலா 3 பேர் மற்றும் ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், கேரளா, ஒடிசா மற்றும் பஞ்சாபை சேர்ந்த தலா இரண்டு பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளுடன் சுமார் 480 பேர் சட்டமன்றம், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். வழக்கு பதியப்பட்டுள்ளவர்களில் 22 எம்பிக்கள் பாஜவை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மஜ்லிஸ், பாமக, மதிமுக, சிவசேனா(உத்தவ் தாக்கரே), விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தலா ஒருவர், சுயேட்சை எம்பி ஒருவர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது. இதேபோல் 74 எம்எல்ஏக்களும் தங்கள் மீது வழக்கு உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.