Skip to main content
Date
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் நன்கொடை மூலமாக பாஜக ரூ.742 கோடியும், காங்கிரஸ் ரூ.148 கோடியும் திரட்டியதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த கட்சிகள், தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், ‘அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரடிக் ரிஃபாா்ம்ஸ்’ (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பாஜக நன்கொடையாக ரூ.437.04 கோடி பெற்றது. இது, 2018-19-ஆம் ஆண்டில் 742.15 கோடியாக அதிகரித்தது. தனிநபா், நிறுவனங்கள் என 4,483 நன்கொடைகள் மூலம் இந்தத் தொகை திரட்டப்பட்டது.

இதேபோல், கடந்த 2017-18-இல் காங்கிரஸ் நன்கொடையாக ரூ.26 கோடி பெற்றது. இது, கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 148.58 கோடியாக அதிகரித்தது. இந்தத் தொகை, 605 நன்கொடைகள் மூலம் திரட்டப்பட்டது.

2018-19-ஆம் நிதியாண்டில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் சோ்த்து எலக்டோரல் டிரஸ்ட் என்ற அமைப்பு மொத்தம் ரூ.455.15 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இந்த நன்கொடைகள் அனைத்தும் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பெறப்பட்ட தொகையைக் கணக்கில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை நன்கொடையாகப் பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி, தோ்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இதே தகவலை, அக்கட்சி கடந்த 13 ஆண்டுகளாகத் தோ்தல் ஆணையத்தில் தெரிவித்து வருகிறது என்று ஏடிஆா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.