Skip to main content
Source
Daily Thanthi
https://www.dailythanthi.com/News/India/rs-189-cr-received-by-26-regional-parties-in-donations-in-2021-22-adr-950381
Author
தினத்தந்தி
Date
City
New Delhi

2021-2022 நிதிஆண்டில் 26 மாநில கட்சிகள் சேர்ந்து மொத்தம் ரூ.189 கோடி நன்கொடை பெற்றுள்ளன. அதில் பாரத ராஷ்டிர சமிதி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொரு நிதிஆண்டிலும், அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல், 2021-2022 நிதிஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட 26 அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விவரத்தை சேகரித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, 26 கட்சிகளும் மொத்தம் ரூ.189 கோடியே 80 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன. இவற்றில், 5 மாநில கட்சிகள் மட்டும் பெற்ற நன்கொடை ரூ.162 கோடியே 21 லட்சம் (85.46 சதவீதம்) ஆகும்.

அ.தி.மு.க.

இந்த நன்கொடையில், பாரத ராஷ்டிர சமிதி ரூ.40 கோடியே 90 லட்சம் நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி ரூ.38 கோடியே 24 லட்சம், ஐக்கிய ஜனதாதளம் ரூ.33 கோடியே 26 லட்சம், சமாஜ்வாடி ரூ.29 கோடியே 80 லட்சம், ஒய்.எஸ்,ஆர்.காங்கிரஸ் ரூ.20 கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பா.ம.க., தேசிய மாநாட்டு கட்சி ஆகிய கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன.

தே.மு.தி.க.

2020-2021 நிதிஆண்டில் நன்கொடை பெறாத ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தே.மு.தி.க. ஆகியவை 2021-2022 நிதிஆண்டில் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. தே.மு.தி.க. ரூ.50 ஆயிரம் பெற்றதாக கூறியுள்ளது.

மொத்தம் ரூ.190 கோடியில், ரொக்கமாக ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிகபட்சமாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை ரொக்கமாக பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் ரொக்கமாக (ரூ.5 லட்சத்து 50 ஆயிரம்) நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.