Skip to main content
Date

4-ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 210 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளதாக நேஷனல் எலக்ஷ்ன் வாட்ச் மற்றும் அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் (ஏடிஆர்) இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.  17-வது மக்களவைத் தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி 8 மாநிலங்களில் 71 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 943 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 943 வேட்பாளர்களில் 928 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏடிஆர் ஆய்வு செய்தது. இந்த ஆய்வை மேற்கொள்ளும் சமயத்தில் மீதமுள்ள 15 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரம் முழுமையாக கிடைக்காத காரணத்தில் அவை தவிர்க்கப்பட்டுள்ளதாக ஏடிஆர் தெரிவித்தது.  இந்த ஆய்வின் படி, 928 வேட்பாளர்களில் 210 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது. அதில் 158 பேர் மீதான குற்றவியல் வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கில் 12 வேட்பாளர்கள் உள்ளனர்.  கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் மீதுள்ள குற்றவியல் வழக்குகள் விவரம்: பாஜகவைச் சேர்ந்த 57 வேட்பாளர்களில் 25 வேட்பாளர்கள், காங்கிரஸின் 57 வேட்பாளர்களில் 18 வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்கள், 21 சிவசேனா வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள், 345 சுயேச்சை வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் ஆகியோர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளது.    கட்சிகளின் அடிப்படையில் வேட்பாளர்கள் மீதுள்ள முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் வழக்குகள் விவரம்: பாஜகவின் 57 வேட்பாளர்களில் 20 வேட்பாளர்கள், காங்கிரஸின் 57 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் 54 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள், சிவசேனாவின் 21 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள், 345 சுயேச்சை வேட்பாளர்களில் 45 வேட்பாளர்கள் ஆகியோர் மீது முக்கியத்துவம் வாய்ந்த குற்றவியல் வழக்குகள் உள்ளது.    இதில் 3 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கு, 24 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, 4 வேட்பாளர்கள் மீது ஆள்கடத்தல் வழக்கு, 21 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு, 16 வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு வழக்கு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது.