Skip to main content
Source
Tamil Hindustan Times
https://tamil.hindustantimes.com/tamilnadu/107-mps-and-mlas-have-hate-speech-cases-against-them-adr-131696344710147.html
Author
Kathiravan V
Date

”கடந்த தேர்தல்களின் போது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது”

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களாக உள்ள 107 பேர் மீது வெறுப்பு பேச்சு குற்த்த வழக்குகள் உள்ளதாக பிரபல ஆய்வு நிறுவனமான ஏடிஆர் தெரிவித்துள்ளது.

ஏடிஆர் மற்றும் நேஷனல் எலெக்‌ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் நாட்டில் 107 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளதாகவும், இதுபோன்ற வழக்குகள் உள்ள 480 வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களின் போது எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி 33 எம்.பி.க்கள் தங்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர். இதன்படி உத்தரபிரதேசத்தில் இருந்து 7 பேர், தமிழ்நாட்டில் இருந்து 4 பேர், பீகார், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இருந்து தலா 3 பேர், அஸ்ஸாம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2 பேர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்.பிக்கள் 22 பேர் மீதும், காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் 2 பேர் மீதும் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளது. 

திமுக, ஆம் ஆத்மி, அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், ஏஐயுடிஎஃப், ம.தி.மு.க., பா.ம.க., சிவசேனா, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளில் உள்ள தலா ஒரு எம்.பிக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்.பி ஆகியோர் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களை பொறுத்தவரை 74 பேர் தங்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளதாக தங்கள் தேர்தல் பிரமாண பத்திரங்களில் தெரிவித்துள்ளனர்.

இதில் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 9 பேரும், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தலா 6 பேரும், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தலா 5 பேரும், டெல்லி, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து தலா 4 பேரும், ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்டில் இருந்து தலா 3 பேரும், கர்நாடகா, பஞ்சாபில் இருந்து தலா 2 பேரும், ராஜஸ்தான் , திரிபுரா, மத்திய பிரதேசம், ஒடிசாவில் இருந்து தலா ஒருவரும் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்புப் பேச்சு தொடர்பான வழக்குகளை அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து 13 பேரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீதும் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

சமாஜ்வாதி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து தலா 5 எம்.எல்.ஏக்கள் மீதும், திமுக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளில் 4 எம்.எல்.ஏக்கள் மீதும், ஏஐடிசி மற்றும் எஸ்ஹெச்எஸ்எஸ் கட்சிகளை சேர்ந்த தலா 3 பேர் மீதும் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.