2024 மக்களவைத் தேர்தலில் 1,644 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 8,337 வேட்பாளர்களில், 1,644 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் உரிமை அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ஏடிஆர்) பகிர்ந்துள்ள தரவுகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வேட்பாளர்களில், 1,188 பேர் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்பூட்டும் பேச்சு உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டு வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
முதல் கட்டத்தில், 1,618 வேட்பாளர்களில், 252 பேர் மீது குற்ற வழக்குகளும், 161 பேர் மீது தீவிர குற்றவழக்குகளும் உள்ளன.
2 ஆம் கட்டத்தில், 1,192 வேட்பாளர்களில் 250 பேர் மீது சாதாரண குற்றவழக்குகளையும், 167 பேர் கடுமையான குற்ற வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
3 ஆவது கட்டத்தில் 1,352 வேட்பாளர்களில், 244 பேர் மீது சாதாரண குற்ற வழக்குகளும், 172 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகளும் உள்ளன.
4 ஆம் கட்டத்தில் உள்ள 1,710 வேட்பாளர்களில் 360 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டுகளும், 274 பேர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் உள்ளன. இது அதிக எண்ணிக்கையிலானதாகும்.
5 ஆவது கட்ட தேர்தல் 695 வேட்பாளர்களை உள்ளடக்கியது. அவர்களில் 159 பேர் சாதாரண குற்றவழக்குகளையும், 122 பேர் கடுமையான குற்றவழக்குகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
6 ஆம் கட்டத்தில் உள்ள 866 வேட்பாளர்களில், 180 பேர் சாதாரண குற்றவழக்குகளையும், 141 பேர் கடுமையான குற்ற வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளனர்.
7 ஆம் கட்டத்தில் உள்ள 904 வேட்பாளர்களில், 199 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டுகளும், 151 பேர் மீது கடுமையான குற்றவழக்குகளும் உள்ளன.
மொத்தமுள்ள 8,360 வேட்பாளர்களில், 8,337 பேரின் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், தேர்தல் உரிமை அமைப்பான ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் பகுப்பாய்வு செய்து இத்தரவுகளை வெளியிட்டுள்ளது.